கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு – தலைமை செயலர் இறையன்பு அதிரடி!

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:

சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு-17ன் படி “தீண்டாமை” ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. “தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்ய விடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3(1)(r)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அது போல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் / ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.08.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கையை 17.06.2022க்குள் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.