புதுடெல்லி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறும் 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலத்துடன் தொப்பூர் சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, திமுக எம்.பியான டிஎன்வி.செந்தில்குமார், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை பொது மேலாளர் பிரஷாந்த்.ஜி காஷ்கரை இன்று டெல்லியில் சந்தித்தார்.
இந்தியாவிலேயே அதிகமாக விபத்து நடக்கும் தருமபுரி என்.எச்.44 அமைந்திருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவுகளை மக்கள் நலன் கருதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என எம்.பி செந்தில்குமார் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில், மீண்டும் அவர் டெல்லியில், தலைமை பொது மேலாளர் பிரஷாந்த்.ஜி காஷ்கரிடம் நேரில் அளித்த கடிதத்தில் கூறியதாவது: இதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. தொப்பூர் சாலை சீரமைப்புக்கு 3 திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதில் உயர்மட்ட பாலம் அமைத்து சாலை அமைத்தல். தற்போது உள்ள நான்கு வழிச்சாலையை எட்டு வழி சாலைக்காக விரிவுபடுத்துதல் மற்றும் சுரங்கப் பாதை அமைத்தல் ஆகியவற்றுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் உரிய முறையை தேர்ந்தெடுத்து சாலைப் பணிகளை வேகமாக முடித்து விபத்துகளைக் குறைப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
காரிமங்கலம் அகரம் கூட்ரோடு பகுதி. குண்டல்பட்டி மற்றும் பாளையம் புதூர் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக நேரில் அறிவுறுத்தல் கடிதம் வழங்கியும் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.