கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த ஜம்னா சாகர் என்ற கப்பல் 10 மாலுமிகளுடன் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் கடல் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தது. கடந்த 9-ம் தேதி இந்தக் கப்பல் குவாடர் பகுதி அருகே வந்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூழ்க ஆரம்பித்தது.
இதையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததும், அவர்களை மீட்க உதவுமாறு பாகிஸ்தானின் கடல்சார் தகவல் மையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. உடனடியாக விரைந்து செயலாற்றிய பாகிஸ்தான் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளை அனுப்பிவைத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் அங்கு சென்று 9 இந்திய மாலுமிகளை மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக எம்டி கிருய்ப்கே என்ற சரக்குக் கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர். கப்பலில் வந்த மாலுமிகளில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை மக்கள் தொடர்பு தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று எங்கள் ஹெலிகாப்டர்களில் அனுப்பி கடலில் தத்தளித்த 9 இந்திய மாலுமிகளையும் மீட்டோம். அவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அந்த கப்பல் கரைக்கு இழுத்து வரப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டு துபாய் துறைமுகத்துக்கு அந்தக் கப்பல் புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.