மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு எப்படி வளார்ச்சிக் காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது:
சாமான்ய மனிதர்கள் பணவீக்கன், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையி மத்திய அரசு மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீருவ் காரண வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு மோதல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு சோதனை என்ற விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறது. இப்படியே சென்றால் தேசம் எப்படி வளர்ச்சி காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதல்வர் மீது வழக்கு: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன.
இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, துணை முதல்வரின் கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மணிஷ் சிசோடியா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பிரிவுகள், பணப் பரிமாற்ற மோசடி தொடர்பானவை. இது தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு எப்படி வளார்ச்சிக் காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.