சென்னை: தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுத் தலைவர் டேவிதார், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று தாக்கல் செய்தார்.
மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை உருவாக்கும் வகையில் மத்திய அரசு 2015-ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியது.
இதன் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகள் வழங்கும் சேவைகளில் ஸ்மார்ட் தீர்வுகளைப் பயன்படுத்தவும், ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி, மாநகரின் பிற பகுதிகளில் பிரதிபலிக்கும் வகையிலும் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து, இதர 10 மாநகராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்காக தலா 50 சதவீதம் என, ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த மே மாத நிலவரப்படி இதுவரை ரூ.9,722 கோடியில் 619 திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1,853 கோடியில் 247 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மட்டும் ரூ.606 கோடியில், 37 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.470 கோடியில் 11 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊழல் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இரவு மற்றும் 31-ம் தேதி காலை வரை அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக சென்னையில் பல கோடி செலவிட்டும், மழைநீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்திருப்பதாகவும், திட்டப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டின.
இதற்கிடையில், சென்னையில் மழைநீர் தேங்கியது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் சட்டப் பேரவையில் எம்எல்ஏக்களும் கேள்வி எழுப்பினர். ஜனவரி 6-ம் தேதி இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் “தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தியது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து தலைமைச் செயலர் அரசாணை பிறப்பித்தார்.
அதில், “ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்பட்டதா? திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி, உரிய விதிகளின்படி செலவு செய்யப்பட்டதா? பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய விதிப்படி வழங்கப்பட்டதா? பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? ஆகியவற்றை விசாரணைக் குழு ஆய்வு செய்யும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளையும் அக்குழு அரசுக்கு அளிக்கும். பதவியேற்ற 3 மாதங்களில், விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த விசாரணைக் குழு தலைவர் டேவிதார், 200 பக்க விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு உடனிருந்தார்.
இதில் உள்ள அம்சங்களின் அடிப்படையில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், அவர்களை நிர்ப்பந்தித்த அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது அரசின் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.