தலைக்கேறிய போதை.. ஆசனவாயிலில் சில்வர் தம்ளரை சொருகிய நண்பர்களால் நிகழ்ந்த விபரீதம்!

போதை தலைக்கேறினால் என்ன செய்வார்கள் என்றே தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். மதுபோதையில் வித்தியாச செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி பலரின் கிண்டல்களுக்கு ஆளாவதுண்டு. அந்த வரிசையில் தற்போது ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது கொஞ்சம் சீரியஸ்தான்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தனது நண்பர்களுடன் கலந்துகொண்டுள்ளார் 45 வயதான க்ருஷ்ணா சந்த்ரா ராவுத். மதுவுக்கு அனுமதியில்லாத ஒரு இடத்தில் நடந்த பார்ட்டி அது. அதீத மதுபோதையில் இருந்த ராவுத் மற்றும் அவரது நண்பர்கள் ராவுத்தின் ஆசனவாய் வழியாக சில்வர் தம்ளரை நுழைத்துள்ளனர். மறுநாள் போதை தெளிந்தவுடன் கடுமையான வலியை உணர்ந்த ராவுத் அதைப்பற்றி பிறரிடம் கூற வெட்கப்பட்டுக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் மருத்துவரிடமும் செல்லாமல் தவிர்த்துள்ளார்.
சூரத்தில் ஒரு டெக்ஸ்டைல் மில்லில் வேலைசெய்துவந்த ராவுத், அங்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்றால் யாருக்காவது தெரிந்துவிடுமோ என்று எண்ணி பயந்து தனது சொந்த ஊருக்கு செல்ல எண்ணியுள்ளார். புவனேஸ்வரில் இருந்து தென்மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் புகுடா தொகுதியில் உள்ள பாலிபடார் ராவுத்தின் சொந்த ஊர்.
image
இதற்கிடையே ராவுத்தின் வயிறு வீங்கி, கடுமையான வலியை அனுபவித்துள்ளார். அவரின் நிலையை கண்ட குடும்பத்தார் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்புர் MKCG மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை சேர்த்துள்ளனர். அதற்குள் தம்ளர் மலக்குடல் வரை சென்றுவிட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோதும் ராவுத் தனது மலக்குடலில் தம்ளர் இருப்பதை அவர் சொல்லவில்லை. எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோதுதான் வயிற்றுக்குள் தம்ளர் இருந்ததை மருத்துவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார் அறுவை சிகிச்சை துறை உதவிப் பேராசிரியர் சஞ்சித் நாயக்.
தம்ளரை எப்படி அகற்றினார்கள் என்பதை விளக்கியுள்ளார் அறுவைசிகிச்சை பிரிவு பேராசிரியர் சரண் பாண்டா. ’’எக்ஸ்ரே எடுத்து பார்த்த உடனே வயிற்றுக்குள் இருந்த தம்ளரை அறுவைசிகிச்சை மூலம் எடுக்க நாங்கள் மருத்துவர் குழுவை தயார் செய்தோம். ஏனென்றால் அவருடைய நிலைமை மோசமாக இருந்தது. முதலில் தம்ளரை ஆசன வாய் வழியாக வெளியே எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், கொலோஸ்டமி மூலம் வயிற்றை கிழித்தே அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். மலக்குடல் பகுதியில் சிக்கியிருந்த தம்ளரை வெளியே எடுக்க கிட்டத்தட்ட 2.5 மணிநேரம் ஆனது.
image
தற்போது அந்த நபர் நல்ல நிலையில் இருக்கிறார். இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும். மேலும் அவர் மலம் கழிக்க கொலோஸ்டமி தாள் இணைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சில நாட்கள் இருக்கவேண்டும். இருப்பினும் தற்போது வரை சிறுநீர் கழிப்பதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை’’ என்று கூறியுள்ளார். வயிற்றுக்குள் சொருகப்பட்ட சில்வர் தம்ளரின் விட்டம் 8 செமீ, நீளம் 15 செ.மீ.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.