அமெரிக்க நீதித்துறை மீது டிரம்ப் வழக்கு

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றாதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுப்பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 8-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கைப்பற்றப்பட்டவை ரகசிய ஆவணங்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் உரிய தகவல் தெரிவிக்காமல் தனது வீட்டில் சோதனை நடத்திய விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு எதிராக புளோரிடா கோர்ட்டில் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் நோக்கங்களுக்கானது என்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனது வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்கள் மீதான நீதித்துறையின் விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.