பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தை ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ் தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தூய்மை பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. மேலும் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சுற்றுப்புரம் தூய்மை, மருத்துவ வசதிகள் அவசியம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், `ஒன்றியத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட அம்மையார்குப்பம் பகுதி மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க ஏதுவாக 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும்’ என கேட்டுகொண்டார். பின்னர் எரும்பி ஊராட்சி மன்ற தலைவர் கீதா பொன்னுரங்கம் பேசுகையில், `ஒன்றியத்தில் தென் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாததால் பொதுமக்கள் மருத்துவ சேவை பெற சோளிங்கர் அரசு மருத்துவமனை நாட வேண்டி உள்ளது. எனவே எரும்பியில் அரசு சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்’ என கேட்டுகொண்டார். மேலும் இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி, வட்டார கல்வி அலுவலர் கிரிஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.