அரசு மகளிர் பள்ளி கழிவறையை தூய்மை செய்த பாமக எம்எல்ஏ!

தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் இன்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது பள்ளியில் சுகாதார சீர்கேடாக இருப்பதை கண்டறிந்து அப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள்  உடன் கழிவறை பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார் அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியதால் தனது உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங்,  பவுடர், பினாயில் வாங்கி வரச் சொல்லி பள்ளி மேலாண்மை குழு தலைவர் உடன் கழிவறையை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலையில் சுத்தம் செய்தார். 

பின்னர் பேசிய அவர், “இதைப்போல தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் ஏழை பள்ளி மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பெனாயில் போன்றவை இல்லை என்றால் எனக்கு சொல்லுங்கள் நான் வாங்கி தருகிறேன்.  

தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் கூறுங்கள் நானே தூய்மையாக்கி விட்டு செல்கிறேன்.  ஏழை பள்ளி மாணவிகளுக்கு சுகாதாரமான கழிப்பறை அவசியம்” எனக்கூறி பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.  

அப்போது பள்ளிகளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாத கழிப்பறைகள் இருந்ததை கண்டறிந்தார். அப்பகுதி முழுவதும் கொசு அதிகமாக இருந்ததை கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொடர்பு கொண்டு பள்ளி முழுவதும் தூய்மையாக்க அறிவுறுத்தினார். 

இது குறித்து பேசிய தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், ”பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளதால் பள்ளி மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது தூய்மை பணியாளர்களை முறையாக பணி அமர்த்தி கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க பள்ளி ஆசிரியருக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.

மேலும், பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டப்படும். அதில் சானிடரி நாப்கின் சுகாதார முறையில் அப்புறப்படுத்தும் எந்திரம் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் பேசியதாகவும் இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் நேரடியாக சென்று முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.