பஞ்ச்குலா: கோவா போதை பார்ட்டியில் கலந்து கொண்டு இறந்த நடிகை சோனாலி போகத்தின் மகளுக்கு மிரட்டல் வந்துள்ளதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மகளிரணி தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவாவில் நடந்த பார்ட்டியில் மர்மமான முறையில் இறந்தார். அவரது மறைவு குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு இறந்தார். இந்த தம்பதிகளின் மகள் யசோதரா, தாய் – தந்தையை இழந்து தவித்து வருகிறார்.
இந்நிலையில் சோனாலி போகத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால், சிலரிடம் இருந்து அவரது மகள் யசோதராவுக்கு அச்சுறுத்தல், மிரட்டல்கள் வருவதாக அரியானா போலீசுக்கு புகார்கள் சென்றன. அதையடுத்து சோனாலி மகளின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் யசோதராவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்புக்கு வழங்குமாறு அரியானா மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா, மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘சோனாலி போகத் வழக்கின் விசாரணை முடியும் வரை யசோதராவின் பாதுகாப்புக்கு போலீஸ்காரர்களை நியமிக்க வேண்டும். அனைத்து சொத்துக்களுக்கும் அவரே வாரிசு என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் பொறுப்பாகும்’ என்று கூறப்பட்டுள்ளது. அதையடுத்து யசோதராவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.