ஓசூரில் கடந்த சில நாட்களாக இரவு வேளையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகேப்பள்ளி ஏரி, பேடரப்பள்ளி ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு ஓசூர் பகுதியில் இடைவிடாது பெய்த 66.40 மி.மீ. கனமழையால் பேகேப்பள்ளி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரியின் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தரைப்பாலத்தை நல்லூர் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (55) என்பவர் கடந்து செல்ல முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி விழுந்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி ஆபத்தான நிலையில் இருந்த மாரப்பாவை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாரப்பா உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மழை தண்ணீரில் இறங்கி மழை வெள்ளத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் மேயர் சத்யா ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.