"படிப்படியாக படர்ந்து முதல்வரானவர் எடப்பாடி" – மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பைகாரா மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செல்லூர் ராஜூவின் மகன் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் இணைந்து துவக்கி வைத்தார். இதில், ஏழை, எளியம் மக்களுக்கு கண்,பல், பொது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தேவைப்பட்டோருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டன. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு உடல் பரிசோதனை செய்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசியதாவது:

“சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வேறு தொழில் செய்யலாமா இல்லை தொழிலை விட்டுச் செல்லலாம் என்ற நிலைக்குச் சென்று உள்ளனர்.

மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் ஏன் வைத்தனர். மக்கள் ஆதரிக்காத போதும் மின்கட்டண உயர்வு நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. பிறகு எதற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினீர்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீது மேலும் சுமையை இந்த அரசு ஏற்றி உள்ளது. மக்கள் மீது மாதா மாதம் வரி சுமத்துவதுதான் திராவிட மாடலா? திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளனர்.

டிடிவி தினகரன், சசிகலா இணைப்பு? ராஜன் செல்லப்பா தகவல்!

தற்காலிக பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்த முதல்வர். தற்போதைய முதல்வரின் தந்தை முன்னாள் முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக இருந்தவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி உழைப்பால் வந்தவர், படிப்படியாக படர்ந்து முதல்வரானவர், அப்பா பின் வந்தவர் இல்லை என்றார். (படிப்படியாக வளர்ந்து என்பதற்கு பதிலாக படர்ந்து என்று கூறியதால் சசிகலா காலில் படர்ந்து முதல்வர் ஆனதை கூறுகிறாரோ என்று விமர்சிக்கின்றனர்)

தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் வருங்காலத்தில் பொதுச் செயலாளராக ஆக உள்ளார். முதல்வர் உங்களின் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள் அவர் தகுதி படைத்தவரா இல்லையா என சொல்லுங்கள். பொய் வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றததால் தமிழக மக்கள் முதல்வர் மீதுமட்டுமல்ல அல்ல அவரின் குடும்பம் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

தமிழகத்தின் 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம், 100 ஆண்டுகள் கடந்தும் இயக்கம் இருக்க வேண்டுமென ஜெயலலிதா(அம்மா) சூளுரைத்தார், அதை எடப்பாடி பழனிசாமி செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி தமிழகத்தில் அமையும்.

ஓ.பி.எஸ் உண்மை சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு கேட்க கோபமடைந்த செல்லூர் ராஜூ தேவையில்லாமல் கேட்கிறீர்கள், சும்மா திரும்பப் திரும்ப அதே கேள்வியே கேட்பீர்களா?? அதிமுக பற்றி கேட்பீர்கள் என்றால் பேட்டியே நான் கொடுக்கத் தேவையில்லை தலைவர்களே கொடுப்பார்கள். பின் ராகுல் காந்தி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப குஷியான செல்லூர் ராஜூ இப்படிக் கேள்வி கேளுங்கப்பா… எனக் கூறினார்.

ராகுல் காந்தி ஓரு இளம் தலைவர் அவரின் அரசியல் பயணத்தில் தேச ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத் தெரியவில்லை ராகுல் காந்திக்கு நல்லபடியாக அமையும்.

முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என கூறுகிறார். என்ற கேள்விக்கு முதல்வர் ஜோக் செய்கிறார் அதற்கு சிரிக்கத் தான் செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் போட்டோக்கு போஸ் குடுக்கிறார். டிவியில் வருகிறார் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார் வடிவேலு இல்லாத குறையை தமிழக அமைச்சர்களும், முதல்வரும் போக்குகிறார்கள் என்றார் .

கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழகம் பின் தங்கி உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது. நீட் தேர்வு வர முழு காரணம் திமுக தான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திட்டத்தை நிறைவேற்ற கருவூலத்தில் பணமில்லை என முதல்வர் கூறுகிறார். எதிர்கட்சித் தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா இல்லையா என தெரியாமலா இருக்கும். மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என உறுதி கொடுத்தார் ஆனால் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிக முக்கியக் காரணம் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படி என கூறினார் முதலில் மக்களுக்கு அல்வா கொடுத்த முதல்வர் தற்போது அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். பார்ப்போம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று கிறார்களா என, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.