கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், இருவயல், தொரப்பள்ளி பழங்குடியின கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் நாடுகாணி, தேவாலா, தேவர்சோலை, மதுரை, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இருவயல், தொரப்பள்ளி பழங்குடியினர் குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறையினர் அவர்களை மீட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் பள்ளியில் தங்க வைத்துள்ளனர். கூடலூரில் இருந்து பொழம்பட்டி, செட்டியங்காடி, மச்சிகொல்லி வழியாக தேவர்சோலை செல்லும் சாலையில் செட்டியங்காடி பகுதியில் நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் நேற்று காலை வீசிய சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கேத்தி-லவ்டேல் இடையே மலை ரயில் பாதையில் ராட்சத கற்பூர மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சிறப்பு மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்தும் நேற்று மதியம் முதல் மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.