சென்னையில் லாரி மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (79). இவர் நேற்று இரவு சைக்கிளில் உணவு வாங்குவதற்காக சத்தியமூர்த்தி நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது முல்லை நகர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள குப்பை சேகரிக்கும் கிடங்கில் இருந்து கொருக்குப்பேட்டை குப்பை கிடங்கிற்கு சென்ற லாரி ஒன்று திடீரென சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் அய்யாதுரை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போக்குவரத்து போலீசார், உயிரிழந்த அய்யாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.