மீண்டும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள்… மின் கட்டண உயர்வு பிரச்னையை திசை திருப்பவா?!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதனைக் கண்டித்து வேலுமணி வீட்டின் முன் திரண்ட 7 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மின்கட்டண உயர்வால் அரசின்மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் திசை திருப்பும் முயற்சி இது. இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும், தொண்டர்களையும் சர்வாதிகார போக்குடன் கைதுசெய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், கைதுசெய்யப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வரலாறு காணத அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மக்களை திசைதிருப்பவே சோதனை நடந்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச்செயலாளர், பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “மின்கட்டண உயர்வு ஏழைகளை பாதிக்க போவதில்லை. 100 யூனிட் அல்லது இலவச மின்சாரம் ஏதும் ரத்து செய்யவில்லை. அப்படி இருக்க, யாருக்கும் பாதிப்பிலாத போது எதற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. இபிஎஸ் ஆட்சியிலேயே வழக்கு தொடுத்து, பொன்னி IPS அதிகாரி தலைமையில் ஒரு குழுபோட்டு அவர்களே நடத்தி முடித்த வழக்குதான் தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதன் வேலைகளை செய்கிறது. அப்படி இருக்கும் போது இதில் திமுக என்ன புதிதாக கிளப்புகிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அடுத்து, அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே வருமான வரி துறை விஜயபாஸ்கள், அவரின் நண்பர்கள், இபிஎஸ் நண்பர்கள் என பல பேர் மீது ரெய்டு நடத்தியதியதா இல்லையா. அப்போதெல்லாம் ஏதும் ஏன் பேசவில்லை. பாஜக கூட்டணியில் தானே இருக்கிறார்கள். மோடி எங்களை பழிவாங்குகிறார். நாசப்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்க வேண்டியது தானே. ஏனென்றால் இவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பது போது தப்பு செய்தவர் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து ஏறத்தாழ வாரத்திற்கு இரண்டு மூன்று மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே மடைமாற்றம் செய்வதற்கு இவர்களை பயன்படுத்த கூடிய அளவிற்கு அவ்வளவு பெரிய யோக்கியர்கள் இல்லை” என்கிறார்.

எஸ்.பி.வேலுமணி மீதான எஃப்.ஐ.ஆர்:

2015-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள 8 லட்சம் தெரு விளக்குகள், எல்.இ.டி விளக்குகளாக ரூ.300 கோடி செலவில் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2016-17, 2017-18 நிதி ஆண்டில் எல்.இ.டி விளக்குகள் மாற்றுவதற்கு, ரூ.875,70,06,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி விளக்குகள் மற்றும் திட்டத்தில் தனக்கு நெருங்கிய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியுள்ளார். டெண்டர் விதிகள் 1998, 2000-ஐ மீறி ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தை விலைக்கும் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட எல்.இ.டி பல்புகள் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. சந்தை விலையை விட அதிக விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளது. சந்தை விலையுடன் ஒப்பிடும் போது சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாங்கப்பட்ட எல்.இ.டி விளக்குகளால் அங்கு அரசுக்கு ரூ.74,00,58,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி

டெண்டர் வழங்கப்பட்ட கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவன இயக்குநர் சந்திரசேகர், எஸ்.பி. வேலுமணிக்கு 20 ஆண்டுகள் பழக்கமானவர். அந்த நிறுவனத்திற்கு அதிக அளவில் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு அரசு வியாபார விதி மற்றும் தலைமைச் செயலக விதி 23-ஐ மீறியுள்ளார். அரசு பணத்தை மோசடி செய்து அரசுக்கு நஷ்டம் விளைவித்ததால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சந்திர பிரகாஷ், சந்திர சேகர், வடவள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், சித்தார்த்தன், கோவைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்கப்பதிவு செய்யப்பட்டது.

சி.விஜயபாஸ்கர் மீதான எஃப்.ஐ.ஆர்:

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சகரணையில் உள்ள வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதனை 150 மாணவர்கள் சேர்க்கைக்கான மருத்துவக் கல்லூரியாக மாற்ற 2019 நவம்பர் 3ஆம் தேதி அனுமதி கேட்டு வேல்ஸ் குழுமத்தின் சேர்மன் ஐசரி கணேஷ் விண்ணப்பித்தார். வேல்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக, 2020 மார்ச் 11 அன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீனாக இருந்த பாலாஜி நாதன் தலைமையில் பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு நவம்பர் 16 அன்று மஞ்சகரனையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் பாலாஜிநாதன் தலைமையிலான நால்வர் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் அனைத்தும் வேல்ஸ் மருத்துவமனையில் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றும், மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கலாம் என்றும் அறிக்கை அளித்தனர்.

சி.விஜயபாஸ்கர்

அதனைதொடர்ந்து 2020 நவம்பர் 27 அன்று மருத்துவமனையை புதிய மருத்துவக்கல்லூரியாக தொடங்க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி சான்றிதழ் வழங்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று புதுகோட்டை மாவட்ட இலூப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். அதனைதொடர்ந்து நவம்பர் 2 அன்று மஞ்சகரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டீன் பாலாஜி நாதன் தலைமையிலான மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில் பல தவறான தகலவல்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அப்போது வேல்ஸ் மருத்துவமனையில் தேவையான கட்டடங்கள் கட்டப்பட்டு மட்டுமே வந்துள்ளன. ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் ரத்த வங்கி போன்றவை அப்போது செயல்பாட்டில் இல்லை என்பதும் தெரியவந்தன.

ரெய்டு

தேசிய மருத்துவ ஆணையத்தில் விதி முறைகளின்படி மருத்துவக்கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 300 படுக்கை வசதிகள்கொண்ட மருத்துவமனை இருப்பது அவசியம். மருத்துவமனை 2 ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் மருத்துவ கல்லூரி அமைக்க வேல்ஸ் குழுமத்திற்கு அனுமதி வழங்கியதில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, மருத்துவ ஆய்வு குழுவினரை வேல்ஸ் குழுமத்திற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய தூண்டியது போன்ற குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனை சேர்மன் ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ் ஆகியோர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேல்ஸ் மருத்துவமனைக்கு சாதகமான, பொய்யான அறிக்கையை தயார் செய்த சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் பாலாஜி நாதன், பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.