இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன், டிவி, கம்பயூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாதனங்களின் இயக்கத்துக்கு பயன்படும் பல்வேறு மின்னணு பொருட்களில் செமிகண்டக்டர் (Semiconductor) முக்கியமானதாக உள்ளது. இதனை இந்தியா இதுவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்து வந்தது.
இந்த நிலையில் உள்நாட்டிலேயே இதனை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. . உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ், நாட்டிலேயே முதல்முறையாக செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலையை மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுவுவற்கான முயற்சிகள், உத்தரதேவ் தாக்கரே தலைமையிலான முந்தைய சிவசேனா ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன.
இதற்காக,Semiconductor உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்களுடன் முந்தைய மகாராஷ்டிர மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை இறுதி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் அளவுக்கு சென்றிருந்தது.
இந் நிலையில்தான் கடந்த ஜூலை மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அவருக்கு பதிலாக அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் ஆதரவுடன் தற்போது அந்த மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
ஆனால், முந்தைய அரசு முன்னெடுத்த முயற்சியின்படி, மகாராஷ்டிர மாநிலத்துக்கு வரவேண்டிய செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலை திட்டம், தற்போது குஜராத் மாநிலத்துக்கு கைமாறி போய் உள்ளது. அதாவது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா -பாஜக கூட்டணி அரசு, மகாராஷ்டிர மாநிலத்துக்கு வரவேண்டிய இத்திட்டத்தை கைநழுவ விட்டுள்ளது.
சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய 1.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்தை தொடங்குவது தொடர்பாக, குஜராத் மாநிில அரசுடன் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலை திட்டத்தை கோட்டைவிட்ட மகாராஷ்டிர மாநில அரசை பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.
‘தற்போது மகாராஷ்டிர மாநில முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய ஆட்சியில் அமைச்சரவை இடம்பெற்றிருந்தார். அவருக்கு இந்த திட்டத்தை கொண்டுவர அப்போதைய மாநில அரசு முன்னெடுத்த முயற்சிகள் குறித்து நன்றாக தெரியும். அப்படி இருந்தும், சுமார் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளிதரும் இந்த பிரம்மாண்ட திட்டத்தை அவர் கோட்டைவிட்டுள்ளார்.
தமது பொறுப்பற்ற இச்செயலுக்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் மகாராஷ்டிர மாநில மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த திட்டத்தை தட்டிப் பறித்து குஜராத்துக்கு கொண்டு சென்றதற்காக மத்திய அரசுக்கு எதிராக, மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுல் காட்டமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அந்த மாநில மக்களை கவரும் நோக்கில், செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலை திட்டத்தை மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு மத்திய பாஜக அரசு மடைமாற்றி விட்டுள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது.