திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வருடாந்திர பிரமோற்சவம், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருப்பதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 27ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை கோயில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் அருள்பாலிக்க உள்ளனர். அக்டோபர் 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.

திருப்பதியில் நடைபெறவுள்ள வருடாந்திர பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. பிரமோற்சவத்தையொட்டி, சிறப்பு பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பதியில் வருகிற 20ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமோற்சவத்தையொட்டி, ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில்ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று ஆலயம் சுத்தம் செய்யப்படும். அதன்படி, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மூலிகை கலவை கோயில் சுவர்களில் தெளிக்கப்படும். இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அக்டோபர் 5ம் தேதி 9ம் நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், கூட்டத்தை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டும் 9 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.