இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார். இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, புதிய மன்னராக 73 வயதான சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ராணியின் மறைவுக்குப் பிறகு அவர் குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசு குடும்ப நடைமுறைப்படி, இரண்டாம் எலிசபெத் ராணியின் உயில் லண்டனில் குறைந்தது 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறந்த அரச குடும்பத்தாரின் உயில்களுக்கு சீல்வைக்கும் வழக்கம் 1910-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

லண்டன் உயர் நீதிமன்ற குடும்ப வழக்குப்பிரிவின் தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த உயில்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை பிரித்து படிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
மேலும் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது எழுதிய கடிதம் அங்குள்ள ஒரு கட்டடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதத்தை அவர் கடந்த 1986-ம் ஆண்டு நவம்பரில் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தை அடுத்த 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்கக் கூடாது என்ற உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது.