ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஹசாரிபாக் மாவட்டத்தில் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
விபத்தில் மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்த பயணிகளை சிறந்த சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (RIMS) அனுப்ப தயாராகி வருகின்றனர். இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்து ஜார்கண்ட் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணம் பெற பிராத்திக்கிறேன்” என்று தனது இரங்கல் அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.