ராஞ்சி :ஜார்க்கண்டில், அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர்களுடன் குரங்கு ஒன்றும் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்தது. இந்த ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.ஜார்க்கண்டின் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளிக்குள், சில நாட்களுக்கு முன் குரங்கு ஒன்று புகுந்தது. அது ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்களுடன் அமைதியாக அமர்ந்து கொண்டது.
மாணவர்கள் சற்று பயத்துடன் நகரத் துவங்கினர்.ஆனால், அந்தக் குரங்கு யாரையும் பயமுறுத்தவில்லை. அமைதியாகவே இருந்து விட்டு, அடுத்த வகுப்பறைக்குள் புகுந்தது. அங்கும், முன் வரிசையில் காலியாக இருந்த மேஜை மீது அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்து விட்டு அமைதியாக புறப்பட்டு சென்று விட்டது.இந்தக் காட்சிகளை பள்ளி ஊழியர் ஒருவர் ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் ‘அரசுப் பள்ளியின் புதிய மாணவர்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த வீடியோவை ஏராளமானோர் ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement