புதுச்சேரி: புதுச்சேரி பாஜக சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றது. தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம் வெளியிடும் பொறுப்பாளர் ஹெச்.ராஜா, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
முன்னதாக ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது. ‘‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்ஐஏ சோதனை மேற்கொண்டது. 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு ஆவணங்கள் கைபற்றப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இதனை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது தொடர்பாக சேலத்தில் எஸ்டிபிஐ தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் தீய சக்திகளுக்கு துணை போவதற்கு என்றே திருமாவளவன், சீமான் போன்ற சிலர் உண்டு. இவர்கள் இதனை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள்.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம் என்று கூறியுள்ளார். ஆனால் ஏன்? ஒரு நடவடிக்கையும் இல்லை. டிஜிபி இப்போது தான் விழித்துக்கொண்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால் 15 மாதங்களாக தூங்குகிறார். சைக்களில் செல்வதும், செல்ஃபி எடுப்பதும், போஸ்ட் செய்வதையும் தான் செய்கிறார். வேறு எதையும் அவர் செய்யவில்லை.
தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடம் என்பதை நான் 15 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழக காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை. என்ஐஏ தான் கைது செய்துள்ளது.
அப்படியென்றால் தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மோசமான சூழ்நிலைக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் காரணம். கோயம்புத்தூரில் திமுக போஸ்டருக்கு துணை ஆணையர் செக்யூரிட்டியாக இருக்கிறார். திமுக போஸ்டரை கிழித்ததாக பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 10 பேர் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று வன்முறையாக கைது செய்யப்பட்டனர். இப்போது தைரியம், முதுகெலும்பிருந்தால் அதில் ஒரு துளியை காட்டுங்கள் பார்ப்போம்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள், தேசி விரோதிகள், வன்முறையை தூண்டுவோர் தைரியமாகவும், துனிச்சலாகவும் இருப்பதற்கு காரணம் திருமாவளவன், சீமான் போன்ற தீய சக்திகளால் தான். இவர்கள் அரசியலில் இருக்க லாயக்கற்றவர்கள். விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐக்கும் வித்தியாசம் இல்லை. ஆகவே தமிழக அரசு அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும், திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அலட்சியமாக இருந்தால் 1998-ல் நடைபெற்ற சம்பவம் மீண்டும் தமிழகத்தில் நடக்கும். பல தமிழர்கள் கொல்லப்படுவார்கள்.
பயங்கரவாதிகளுக்கு எந்த பாதுகாப்பும் தமிழக காவல்துறை கொடுக்கக்கூடாது. திருமாவளவன், சீமான் போன்றவர்கள் தீய சக்திகள். மிக மோசமான நபர்கள். தேச விரோதிகள். அவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக அரசு வார்த்தைகளால் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறு எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.