அடுத்த சர்ச்சையில் இன்னொரு சினிமா : அவஸ்தையில் ‛ஆதி புருஷ்'

மும்பை : ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள சில தோற்றங்கள், ஆடைகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அவஸ்தையை தந்துள்ளது.

பாலிவுட்டில் சமீபகாலமாக எந்த ஹிந்தி படங்கள் வெளியானாலும் பாய்காட் என்ற வார்த்தை அதிகம் ஒலிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக முன்னணி நடிகர்கள் மற்றும் வாரிசு நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போதும் அதிகளவில் இந்த பாய்காட் வார்த்தை ஒலிக்கிறது. இப்போது அந்த சர்ச்சையில் சிக்கி இருக்கும் படம் ‛ஆதி புருஷ்'.

ராமாயணத்தை தழுவி உருவாகி உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதாவாக கிர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார். இதன் டீசர் இருதினங்களுக்கு முன் வெளியானது. டீசருக்கான பார்வைகள் ஐந்து மொழிகளிலும் 100 மில்லியன் பார்வைகளை கடந்தன. இருப்பினும் படத்தின் காட்சியமைப்புகள் கார்ட்டூன் படத்தை விட மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளன.

இந்த சர்ச்சையோடு புதிய சிக்கலையும் ஆதி புருஷ் சந்தித்துள்ளது. இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக காட்சியமைப்புகள் உள்ளதாக படத்திற்கு மத்திய பிரதேச அமைச்சர் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓம் ராவத்திற்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கை விபரம் : ஆதி புருஷ் டீசரை பார்த்தேன். அதில் ஆட்சபனைக்குரிய காட்சிகள் உள்ளன. டீசரில் கண்ட இந்து கடவுளின் உடைகள் மற்றும் தோற்றங்களை ஏற்க முடியவில்லை. தோலினால் செய்யப்பட்ட ஆடையை அனுமன் அணிந்துள்ளார். இதிகாசங்களில் அப்படி ஒரு விஷயமே இல்லை. அந்த ஆடை இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. இதுபோன்ற காட்சிகளை நீக்கும்படி ஓம் ராவத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

ஆதி புருஷ் படத்தில் வரும் நடிகர்களின் தோற்றங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவுட்டு வருகின்றனர். மேலும் BanAdipurush என்ற ஹேஷ்டாக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே படத்தின் காட்சியமைப்புகள் சரியாக இல்லை, காட்டூன் படத்திற்கும் கீழான காட்சி அமைப்புகள் உள்ளன என பலரும் சில தினங்களுக்காக விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளும் ஆதி புருஷ் படக்குழுவினருக்கு புதிய தலைவலியையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.