அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உலகம்முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதேசமயம் சோழ வரலாறு தவறாகக் காண்பிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் இப்படத்தின் மீது பரவலாக எழுந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன், ‘கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். நாம் கையாளத் தவறினால் நம்முடைய நிறைய அடையாளங்கள் நம்மிடமிருந்து எடுக்கப்படும். வள்ளுவருக்கு காவி உடை அணிவது, ராஜராஜ சோழன் இந்து அரசனாக ஆக்கப்படுவது போன்றவை கலை இலக்கியம் மட்டுமில்லாமல் சினிமாவிலும் நடைபெற்று வருகிறது. நம் அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதற்கு நாம் நல்ல அரசியல் தெளிவோடு இருக்கவேண்டும்” என்று கூறினார்.
இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இது ராஜராஜ சோழனை கதை நாயகனாக வைத்து உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் நாவலையும், அதை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், பெரும் விவாதப்பொருளாக மாற்றியுள்ளது.

இதையடுத்து திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் இந்தக் கருத்தை ஆதரித்துப் பேசியிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருள்மொழி சோழனின் உண்மையான வரலாற்றையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வே.பிரபாகரனின் வரலாற்றையும் கலைவடிவமாக தான் தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் அதை இயக்குவார் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார். pic.twitter.com/e4IwrcG51c
— சீமான் (@SeemanOfficial) October 5, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீமான், “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.