பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை எடுத்து விழாக் குழுவினரிடம் வழங்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்று மதுரையில் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத்திடம் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் கடிதம் வழங்கினார்.
பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி ஒரு வாரத்துக்கு முன்பாக அவரது சிலைக்கு அணிவிக்கும் விதமாக அதிமுக வழங்கிய தங்கக்கவசம் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் உள்ள பெட்டகத்தில் இருந்து எடுக்கப்படும். இக்கவசத்தை கட்சியின் பொருளாளர் வங்கியில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டு விழாக் குழுவினரிடம் வழங்குவார்.
தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணியாக அதிமுக பிரிந்து, வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் கட்சிப் பொருளாளர் பதவியை உரிமை கோருவதில் சிக்கல் உள்ளது.
ஏற்கெனவே இபிஎஸ் தரப்பினர் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகத்திடம் தங்களது அணியைச் சேர்ந்த பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூலமே கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. தர்மர், அய்யப்பன் எம்எல்ஏ, சிவகங்கை மாவட்ட ஆவின் தலைவர் கல்லல் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகத்திடம் நேற்று கடிதம் கொடுத்தனர்.
அதில், வழக்கு நிலுவையில் இருப்பதாலும், தேர்தல் ஆணையத்தின்படி, ஓபிஎஸ்தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வப் பொருளாளர். அவரிடமே பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை எடுத்து, விழாக் கமிட்டியினரிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணைய முடிவின்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான் பொருளாளராக உள்ளார். தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு மட்டுமே உள்ளது.
இபிஎஸ் தரப்பு சார்பில், கொடுத்த கடிதம் சட்டத்துக்குப்புறம்பானது. அதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளோம். சட்டத்துக்குட்பட்டு பரிசீலிப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றார்.