உலகிலேயே மிகவும் உயரமான, 23 அடி உயரம் மற்றும் 17 அடி அகலமும் கொண்ட, 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரூ.4 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை அரியூர் தங்ககோவில் வளாகத்தை வந்தடைந்தது. உயரமான பஞ்சலோக நடராஜர் சிலைக்கு பக்தர்கள் வழிநெடுங்கிலும் மலர் தூவி மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வேலூர் மாவட்டம் அரியூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் பஞ்சலோகத்தால் 23 அடி உயரம் 17 அடி அகலம் 15 ஆயிரம் கிலோ எடையுடன் ஸ்ரீ நடராஜர் சிலை ஆனாது உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடியாகும். மேலும் இந்த அளவு உயரமான நடராஜர் சிலை உலகில் வேறு எங்கும் கிடையாது.
தமிழ்நாட்டில் அதுவும் தங்ககோவிலில் தான் உலகில் மிகவும் உயரமான நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த சிலையானது மிகப்பெரிய லாரி மூலம் கும்பகோணத்திலிருந்து வேலூர் அரியூர் தங்ககோவிலுக்கு வந்தது. இதனை வழிநெடுங்கிலும் காண காத்திருந்த பக்தர்கள் சிலை மீது மலர்களை தூவி சிவவாத்தியங்களான திருவூடல் வாத்தியங்களை இசைத்து உலகில் மிகப்பெரிய ஸ்ரீ நடராஜருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த சிலையில் சிறப்பு அம்சமாக 51 அக்னி ஜுவாலைகளும்,51 சிவ அக்ஷரங்களும், 52 சிம்மங்கள், 50 பூதகனங்கள், 102 தாமரை மலர்களும் சிற்ப வேலைபாடுகளும் இந்த சிலையினுள் அடங்கும். உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த சிலையானது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சிலை அரியூர் மலைகோடி விருந்தினர் தங்கும் மாளிகை அருகில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.