குஜராத் மாநிலத்தில் பழங்குடியின எம்எல்ஏ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்குமார், அப்பகுதியில் பழங்குடியின சமூகத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நவ்சாரி மாவட்டம் ஹர்ஜம் என்ற பகுதியில் எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் நேற்று இரவு தனது காரில் சென்றார்.
அப்போது, காரை மறித்த மர்ம கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றது. கும்பல் நடத்திய தாக்குதலில் ஆனந்த்குமார் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், அவர் பயணித்த கார் கண்ணாடியையும் அந்த கும்பல் உடைத்தது.
தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆனந்த்குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் அவரது வீட்டின் அருகே நள்ளிரவு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.
ஜுலா பஞ்சாயத்து பாஜக தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், குரல் எழுப்பும் அனைவரும் பாஜக அரசால் துன்புறுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
newstm.in