சென்னை: பச்சரிசிக்கும், இட்லி அரிசிக்கும் வித்யாசம் தெரியாமல் 20 சதவிகித ஏற்றுமதி வரி செலுத்த நிர்பந்திப்பதால் தமிழ்நாட்டின் துறைமுகங்களில் 1000கிலோ டன் இட்லி அரிசி தேக்கமடைந்து இருப்பதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகபெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா அரிசி ஏற்றுமதியில் 40 சதவிகிதக்கு அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 30 சதவிகித விளையும் பாரம்பரிய இட்லி வகை அரிசி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால் பாசுமதி, புழுங்கல் அரிசியை தவிர மற்ற ரக அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரி விதித்து ஒன்றிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், பச்சரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட 20 சதவிகித வரி விதிப்பால் ஜப்பான், சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய 1000கிலோ டன் இட்லி அரிசி தமிழ்நாட்டின் துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இட்லி அரிசி பார்ப்பதற்கு பச்சரிசி போல் இருப்பதால் அதனையும் பச்சரிசியாக கருதி 20 சதவிகித வரியை செலுத்தும் படி துறைமுக அதிகாரிகள் கேட்பதாகவும் புகார் கூறியுள்ளனர்.
பச்சரிசி வேறு இட்லி அரிசி வேறு என்ற விளக்கத்தை துறைமுக அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் வெளிநாடுகளுக்கு இட்லி அரிசி ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் ஆலை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரிசி தேக்கமடைந்துள்ளதால் புதிதாக நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என்றும், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, அரிசி வகைகளில் உள்ள வித்யாசத்தை உணர்ந்து இட்லி அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி தர வேண்டும் என்று ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.