7,100 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள கண்கவரும் குமிழ் மூடிய நெபுலா – புகைப்படத்தை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

விண்ணில் உள்ள பல மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கைக்கோள்களையும், தொலைநோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

தற்போது, பூமியில் இருந்து 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பி உள்ளது. விண்மீ்ன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த ‘பபுள் நெபுலா’ கண்கவரும் வகையில் வண்ணமயமாக உள்ளது. நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். பபுள் நெபுலா தற்போது வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப்பட்டுள்ளது.

இது மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது. இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் ‘சூப்பர்நோவா’வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும், பபுள் நோவா 7 ஒளி ஆண்டுகள் சுற்றளவுக்கு மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளது. விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வே சூப்பர்நோவா என்றழைக்கப்படுகிறது. அப்போது சூரியனை போன்ற பல மடங்கு சக்தியை அது வெளியிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப்படத்தை வெளியிட்ட நாசா கூறும்போது, ‘‘பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்ஸிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.