கடலூர் மாவட்டத்தில் 2 பள்ளி வேன்கள் மோதிய விபத்தில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 2 வேன்கள் பெண்ணாடத்திலிருந்து இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது இரண்டு வேன் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை இயக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருதாச்சலம் அடுத்த கோ.ஆதனூர் அருகே 2 வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.
இதில் நிலைதடுமாறி ஒரு வேன் சாலை ஓரம் கவிழ்ந்த நிலையில், மற்றொரு வேன் சாலையைக் கடந்து ஓரம் சென்று நின்றது. இந்த விபத்தில் வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து விருதாச்சலம்-சிதம்பரம் சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.