சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பதவி உயர்வு உத்தரவுகளை வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன்னதாகவே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை-நிதித் துறை இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெறுகிறது. அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு, நிதியமைச்சருடன் நான் ஆலோசிக்க உள்ளேன். அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்தையும் விவாதித்து, உரிய முடிவு எடுக்க உள்ளோம். தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என்பதை, நிதிநிலையைப் பொறுத்து முதல்வரின் அலுவலகம்தான் முடிவு செய்யும். கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.