அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பருவமழை பாதிப்புகள் எப்படியிருந்தாலும், மின் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள், அதில் முடிவடைந்துள்ள பணிகள், இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை விரைவாக முடிப்பதற்கு உண்டான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த வடகிழக்குப் பருவமழைக்காக மின்மாற்றிகளைப் பொருத்தவரை, 14 ஆயிரத்து 442 கையில் இருப்பாக உள்ளன. மின்கம்பங்களைப் பொருத்தவரை, 1 லட்சத்து 50 ஆயிரத்து 932 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏறத்தாழ 12 ஆயிரத்து 780 கி.மீட்டர் அளவுக்கு மின் கம்பிகள் தயார் நிலையில் இருக்கின்றன. எனவே, இந்த மழைக் காலங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ள பொருட்களின் இருப்புகள் குறித்தும், அந்தந்த மண்டலங்கள், வட்டங்கள் வாரியாக தேவையான பொருள்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக 15.6.2022 தொடங்கி, 8.10.2022 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதில், 13 லட்சத்து 65 ஆயிரம் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஏறத்தாழ மின்கம்பங்களைப் பொருத்தவரை 39 ஆயிரத்து 616 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 31 ஆயிரத்து 197 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. புதிதாக 25 ஆயிரத்து 80 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1759 கி.மீட்டர் அளவுக்கு பழைய மின்கம்பிகள் மாற்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சென்னையைப் பொறுத்தவரை, 2692 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மழையின்போது இது பெரிய அனுபவமாக இருந்தது. அரை மீட்டர் தண்ணீர் தேங்கினால்கூட அதை சரி செய்ய மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொரு மின் பகிர்மானக் கழக வட்டத்திற்கும் ஒரு செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், குழுக்கள் அமைக்கப்ப்டடுள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.