ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கரவுலி மாவட்டம் மெட்புரா கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் தங்களது வீட்டிற்கு வர்ணம் பூசுவதற்காக அருகில் உள்ள மண் மேட்டிற்கு சென்றனர். அப்போது மண் மேடு திடீரென சரிந்ததால் மண் அள்ளிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்குழியில் சிக்கியது போல் அதில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 3 சிறுமிகள் உட்பட 6 ெபண்கள் மண் மேட்டின் சரிவில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர், மண் மேட்டிற்குள் சிக்கி உயிரிழந்த 6 பேரை மீட்டனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். திடீரென மண் மேடு சரிந்ததால் 6 பேரும் இறந்துள்ளனர்’ என்று கூறினர்.