சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.79 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஷர்மிளா நாகமுத்து என்ற பெண்ணிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவரது உடமைகளை சோதனை மேற்கொண்டதில், 3 எமர்ஜென்சி விளக்கு இருந்தன. இந்த மூன்று எமர்ஜென்சி விளக்குகளை சோதனை செய்ததில், 24 தங்க தகடுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள், ரூ.79 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 808 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஷர்மிளா நாகமுத்துவை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.