லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆன்லைனில் பெண் ஒருவர் கடிகாரம் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு மாட்டு சாணம் வறட்டி பார்சலில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார். பண்டிகை காலம் என்பதால் சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகை, தள்ளுபடி விலைகளில் பொருட்களை விற்று வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் கவுசாம்பி மாவட்டம் கசென்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்ற பெண், பிரபல ஆன்லைன் ஷாப்பின் தளத்தில் கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்தார்.
அதற்கான கட்டணமாக ரூ.1,304-ஐ செலுத்தி உள்ளார். கிட்டதட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அதாவது கடந்த 7ம் தேதியன்று அவருக்கு சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திடம் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை நீலம் யாதவ் திறந்து பார்த்தபோது தான் ஆர்டர் செய்த கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தின் வறட்டிகள் இருந்தன. அதிர்ச்சியடைந்த அவர் சம்பந்தப்பட்ட டெலிவரி பாயை தொடர்பு கொண்டு, ஆர்டர் செய்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து நீலம் யாதவின் சகோதரர் ரவேந்திர யாதவ் கூறுகையில், ‘கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தின் வறட்டியை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அனுப்பி உள்ளது. டெலிவரி பாயின் போன் எண்ணில் அவரை தொடர்பு கொண்டு, அவரை நேரில் வரவழைத்து எங்கள் பிரச்னை குறித்து எடுத்து கூறினோம். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. எங்கள் பகுதியினர் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பியதால், ஆர்டர் செய்த பணத்தை திருப்பிக் கொடுத்தார்’ என்றார்.