குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டவேண்டும்: சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் நேற்று நடந்தது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1900 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு உடல் மட்டும் அல்ல, உள்ளத்திற்கும் வலிமை அளிக்க கூடிய மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று 300 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடக்கிறது. பெண்கள் தான் கருவுற்று இருப்பது அறிந்தவுடன் அருகில் உள்ள சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அங்கு வழங்கப்படும் இணை உணவு ஊட்டச்சத்து உணவை பெற்றுக்கொள்ளவேண்டும். நமது மாவட்டத்தில் மட்டும் 940 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்து 506 கர்ப்பிணி பெண்களும், 5 ஆயிரத்து 196 பாலூட்டும் தாய்மார்களும், 6 மாதம் முதல் 6 வயது வரை 41 ஆயிரத்து 694 குழந்தைகள் என அனைவருக்கும் சத்தான இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள முன்பருவ கல்வி பயிலும் 24 ஆயிரத்து 27 குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.

இத்தருணத்தில் கருவுற்ற தாய்மார்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டவேண்டும். முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டியுள்ளனர். அப்பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்துள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரோ அல்லது புரியாத பெயரோ வைக்கின்றனர். இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். விழாவில், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர்கள் மலர்க்கொடி குமார், கருணாநிதி, தேவேந்திரன், சரஸ்வதி மனோகரன், ஹேமலதா ஞானசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம்) கிருஷ்ணவேணி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜாத்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.