மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க வலியுறுத்தி மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிக வருமானத்தை எதிர்பார்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் தொழில்நுட்ப பயிற்சியோ, கல்வி தகுதியோ இன்றி ஏஜெண்டுகளை நம்பி குவைத் சென்று பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட வேலைக்கு பதிலாக வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலநேரம் இன்றி வேலையில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவர்களின் பாஸ்போர்ட்கள் வேலை வழங்கும் உரிமையாளர்களால் பறித்து வைக்கப்பட்டுள்ளன. உணவின்றி அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். மத்திய அரசு துரிதமாக தலையிட்டு குவைத் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, 35 தொழிலாளர்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.