மதுரை: கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் பெய்த கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது. கனமழையால், மதுரை மாட்டுத்தாவணி அருகில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள டி.எம்.நகர், ஆதி ஈஸ்வரன் நகர், பொன்மணி கார்டனில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. தெருக்களில் சுமார் 5 அடிக்கு மழை நீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். உடனடியாக தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டார். வெள்ளம் வந்தது எப்படி?: மதுரை டி.எம்.நகர் மெயின் ரோட்டில், சாத்தையாறு அணை கால்வாய், கொடிக்குளம் கண்மாய், உத்தங்குடி கண்மாய் மற்றும் ஈச்சனோடை கால்வாய் சந்திக்கின்றன. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய்களில் நீர் நிரம்பி டிஎம்.நகர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மகாராஜபுரம், ராமச்சந்திராபுரம், ரெங்கப்பநாயக்கர்பட்டி, குன்னூர், கீழகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சாலை, தெருக்கள் மற்றும் நீர்வரத்து ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மகாராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.