மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30-ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்தாண்டு அக்.30-ல் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் அக். 30-ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வரும் பிரதமர், விமானத்தில் மதுரை வந்து, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் அல்லது காரில் பசும்பொன் தேவர் நினைவிடம் செல்வதற்கு வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தமிழக உயர் அதிகாரிகளுக்கு, மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பிரதமரின் பசும்பொன் வருகையை காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இன்னும் ஓரிரு நாளில் பிரதமரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டு, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கட்சியினர் தெரிவித்தனர்.
கடந்தாண்டு தேவர் ஜெயந்தியின்போது பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.