வைரல் வீடியோவில் பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய பாலிடெக்னிக் மாணவன் போக்சோவில் கைது!

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவொருவர் தாலி கட்டிய வீடியோ தொடர்பாக அம்மாணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடலூர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.
சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவரொருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
image
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பாலிடெக்னிக் மாணவன் மற்றும் அரசு பள்ளி மாணவி ஆகிய இருவரும் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மாணவியை சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அந்த பாலிடெக்னிக் மாணவனான சிறுவனிடம் விசாரணை செய்த போலீசார், எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் மீண்டும் ஆஜராகும்படி எழுதி வாங்கி விட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இச்சம்பவத்தை முகநூலில் பதிவிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் மீது மாணவியின் தாயார் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
image
அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலாஜி கனேஷை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் மாணவனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் மாணவனான சிறுவன் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், தற்போது கூடுதலாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனை கடலூர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.