இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி பயிர் காப்பீட்டு தொகை: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு 2021-22-ம் நிதியாண்டில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் வருவாயைப் பன்மடங்காக உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2021-22-ல் தமிழகத்தில் 1.22 கோடி டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 37 மாவட்டங்கள் 14 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம், இப்கோ–டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம் மூலம், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ரூ.18 கோடி விநியோகம்: கடந்த 2021-22-ல் இத்திட்டத்தின் கீழ் சுமார் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைக் காப்பீடு செய்வதற்காக, 26.06 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை பருவத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக 21,125 விவசாயிகளுக்கு ரூ.18 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2021-22-ம் ஆண்டு சம்பா நெல் மற்றும் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட சிறப்பு பருவ பயிர்களுக்கு தமிழக அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,338.89 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டது.

சிறப்பு நடவடிக்கை: இதன் மூலம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து, 2021-22-ம் ஆண்டு சம்பா நெல் உட்பட சிறப்பு பருவபயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் ரூ.481 கோடியை, 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இயற்கைப் பேரிடரால் அடிக்கடி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில்கொண்டு, நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.2,057 கோடி தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

86 ஆயிரம் பேர் காப்பீடு: இந்தப் பருவத்தில் இதுவரை 85,597 விவசாயிகள், 63,331 ஏக்கர் பரப்பிலான பயிர்களை காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இப்கோ–டோக்கியோ பொது காப்பீடு நிறுவன முதுநிலை மேலாளர் சிவராஜ் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.