தேவர் ஜெயந்தியில் அறிவிப்பு? தெற்கில் பாஜக புது வியூகம்… மோடியின் அடுத்த டார்கெட்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது தென் மாவட்ட அரசியல் களத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். முக்குலத்தோர் வாக்கு வங்கியை வசப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் நடப்பாண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு போர்த்தப்படும் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து யார் எடுத்து வரப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி பொருளாளராக நியமித்த திண்டுக்கல் சீனிவாசனா? இல்லை ஓ.பன்னீர்செல்வமா? என அரசியல் களத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாரும் எதிர்பாராத முக்கியத் தகவல் வெளியாகி அதிமுகவை கப்சிப் ஆக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. எல்லாம் பிரதமர் மோடி வருகை தான். கடந்த ஆண்டு ட்விட்டரில் தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்திய மோடி, நடப்பாண்டு நேரடியாக பசும்பொன்னிற்கே செல்கிறார்.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனினும், விஷயம் சீரியசாக பேசப்பட்டு வருகிறது. மதுரை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்வார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருகையின் பின்னணியில் அரசியல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. பாஜகவின் செல்வாக்கை பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களுக்கு சிலை வைப்பது, அவர்களின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் நீட்சியாக தான் பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருவதும் எனக் கூறுகின்றனர். இதனால் தென் தமிழகத்தில் வலிமை பெற்று விளங்கும் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெற முடியும். ஏற்கனவே பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அவர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியது பாஜக.

இதையடுத்து முக்குலத்தோரின் ஆதரவும் கைகூடினால் தென் மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு என்பது விஸ்வரூபம் எடுக்கும். இந்நிலையில் மற்றொரு தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது. குரு பூஜையின் போது மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அதனை நிறைவேற்றி தென் மாவட்ட மக்களின் பெருவாரியான ஆதரவை பெறப் போகிறார் என பேசத் தொடங்கியுள்ளனர்.

தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகனின் மாநிலங்களவை எம்.பி பதவி வரும் 2024ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. சரியாக மக்களவை தேர்தலுக்கு முன்னதாக முடிவடைகிறது. எனவே அவர் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் தென் மாவட்டத்தின் முக்கியத் தொகுதி ஒன்றில் இருந்து போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கான வியூகத்தையும் பாஜக வகுக்கத் தொடங்கிவிட்டது. இவற்றுக்கெல்லாம் அச்சாரமாக தான் தேவர் ஜெயந்தியில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.