சவாலான கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக ரேவதி

கடந்த 40 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் பட்டியலை எடுத்தால் அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் நடிகை ரேவதியின் பெயரும் நிச்சயம் இடம்பிடிக்கும். அந்த அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற ரேவதி, நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய படமொன்றில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆனால் இங்கல்ல.. பாலிவுட்டில்..

பாலிவுட் இயக்குனர் அனிர்பன் போஸ் என்பவர் இயக்கும் ஆயே ஜிந்தகி என்கிற படத்தில் தான் இவர் கதாயின் நாயகியாக அதிலும் மிக சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருத்துவமனையில் எதிர்பாரதவிதமாக உயிரிழக்கும் நபரின் உறுப்புகளை தானம் செய்யும் விதமாக, இறந்த அந்த நபரின் குடும்பத்தாரிடம் சென்று அந்த இக்கட்டான சூழலிலும் பக்குவமாக பேசி அவர்களை கன்வின்ஸ் செய்து உறுப்புகளை தானம் செய்ய சம்மதிக்க வைக்கும் பொறுப்பு வகிக்கும் மருத்துவமனை ஊழியர் கதாபாத்திரத்தில் ரேவதி நடிக்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் கூறும்போது, “நிஜத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ரேவதி நடிக்கும் கதாபாத்திரம் சவாலானது தான் என்றாலும் ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததுடன் தானே முதல் ஆளாக உறுப்புகள் தானம் செய்வதற்காகவும் கையெழுத்திட்டவர் ரேவதி என்பதால் இந்த கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.. அதிலேயே எனது மிகப்பெரிய பளு குறைந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இயக்குனராக தற்போது கஜோலை வைத்து ரேவதி இயக்கியுள்ள சலாம் வெங்கி என்கிற திரைப்படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.