தேன்சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர்: பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு சேர்க்கும் மூன்று புதிய இதழ்கள்!

`அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளுக்கேற்ப புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை. பாடப்புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என கற்றலையும், கற்பித்தலையும் கட்டாயமாக்கிக்கொண்டு, ஒரு வட்டத்துக்குள் ஆசிரியர்களும் மாணவர்களும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிறிது இளைப்பாறலாக, பாடப்புத்தகளைத் தாண்டி வெளிஉலகத்தை அணுகும் ஒரு பாலமாக அவர்களின் கைகளுக்குள் வந்தமர்ந்திருக்கின்றன இந்த மூன்று இதழ்கள்.

இதழ் வெளியீட்டு நிகழ்வில் முதல்வர்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கென்று பிரத்யேகமாக `கனவு ஆசிரியர்’ என்ற இதழையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கென்று `ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக `தேன்சிட்டு’ என்கிற இதழையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மூன்று இதழ்களும் என்ன சொல்கின்றன… எதைக் கற்பிக்க வந்திருக்கின்றன… இதனால் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும்… வாருங்கள் இதழ்களைப் புரட்டுவோம்!

கனவு ஆசிரியர்

`கனவு ஆசிரியர்’:

`கனவு ஆசிரியர்’ என்ற இதழ் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு மாத இதழ். கல்வி, வாழ்க்கை, சமூகம், நலம், பொது என பல உள்ளடக்கங்களைக்கொண்டிருக்கும் இந்த இதழில், பள்ளி மேலாண்மைக்குழுவின் அவசியம், புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்பதுகுறித்தான விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

கனவு ஆசிரியர் இதழ்

இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் அறிவைத் தூண்டும் வகையில், ஆரோக்கிய டிப்ஸ், தொழில்நுட்ப அறிமுகம், பொது அறிவுத் தகவல்கள், சுவாரஸ்ய சம்பவங்களும், ஆசிரியர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறுகதைகள், பார்க்கவேண்டிய சினிமா பற்றிய விமர்சனங்கள்கூட அடங்கியிருக்கின்றன. மேலும், இந்த இதழிலுள்ள சிறப்பு என்னவென்றால் இதில் பெரும்பாலான கதைகள், கட்டுரைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களேதான் எழுதுகிறார்கள். மேலும், கலை, சூழலியல் என சாதனை படைத்த அரசுப் பள்ளிகளின் கதைகளும் வெளியாகி, மற்ற ஆசிரியர்களை தங்கள் பள்ளியையும் முன்மாதிரிப் பள்ளிக்கூடங்களாக மாற்றியமைக்க நினைக்கும் வகையில் ஊக்கப்படுத்துகிறது இந்த கனவு ஆசிரியர் இதழ்.

ஊஞ்சல்: படிக்கலாம்! பறக்கலாம்!

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் `ஊஞ்சல்’ இதழ் மாதம் இருமுறை வெளியாகும். முழுக்க மழலைக் குழந்தைகளுக்கு ஏற்றவகையிலான மகிழ்ச்சிப் பாடல்கள், உயிரினங்கள் சொல்லும் சிறார் கதைகள், சித்திரக் கதைகள் என நிரம்பிக்கிடக்கின்றன. கலைத்திறனை வளர்க்கும் வகையில் ஓரிகாமி காகித மடிப்புக்கலை, ஓவியம் வரைதல் பயிற்சி மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் புதிர்கள் கண்டுபிடித்தல், விடுகதைகள், புதிய நூல்களின் அறிமுகம், ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு, பாரம்பர்ய நினைவுச்சின்னங்கள், உயிரினங்கள் குறித்து சுவாரஸ்ய துணுக்குகள், கலை அறிவு என இரண்டையும் இந்த இதழ் பயிற்றுவிக்கிறது.

ஊஞ்சல்

முக்கியமாக, இதழின் நடுப்பக்கத்தில் `மாணவர் படைப்புகள்’ எனும் தலைப்பில், மாநிலம் முழுக்க உள்ள பல்வேறு அரசுப்பள்ளி குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்று சித்திரச்சோலையாக காட்சியளிக்கிறது. மேலும், மாணவர்களிடத்தில் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையிலான சமூக நல்லிணக்க கதைகள் இடம்பெற்று பிஞ்சிலே அமுதை ஊட்டும் நல் முயற்சியாக அமைந்திருக்கிறது.

தேன்சிட்டு

தேன்சிட்டு : உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம்

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானது `தேன்சிட்டு’ என்கிற மாதமிருமுறை இதழ். பதின்பருவ மாணவர்களுக்கு ஏற்றவகையில் அறிவியல் சார்ந்த கேள்வி பதில்கள், புதிர்கள், அறிவியல் சோதனைகள், தொல்லியல் வரலாறுகள், தலைவர்கள் வரலாறு, விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவுமுறைகள், வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் என இதழ் முழுக்க பொது அறிவுச் சுரங்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வெளியுலக அறிவை இந்த இதழ் மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை!

இதழ்களின் இலக்கு என்ன?

பள்ளிக்கல்வித் துறையின் இந்த புதிய முயற்சிக்கான காரணம், ஆசிரியர், மாணவர்களிடத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம், திட்டத்தின் நோக்கம் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறைகள் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரிடம் பேசினோம்.

நந்தகுமார்

“அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்துக்கு வெளியில் இருக்கும் உலகை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் (LSRW – Listening Speaking, Reading, Writing) ஆகிய கற்றலுக்கான திறன்களை மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இந்த இதழ்கள் கொண்டுசேர்க்கப்படும். மாணவர்கள் இந்த இதழை படிப்பதற்காகவே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கித் தரப்படும். இந்த இதழ்களை அடிப்படையாக வைத்து பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். மேலும், இதழில் மாணவர்களையும் பங்குகொள்ளச்செய்யும் வகையில் அவர்களின் ஓவியங்கள், கதைகள், கவிதைகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.

மாணவர்களுக்கு இதழை படித்துக்காட்டும் அமைச்சர் அன்பில் மகேஷ்

முக்கியமாக வருங்காலத்தில் தொடர்ந்து, இதழுக்கு அதிகமாக படைப்புகளை வழங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கி இதழின் ஆசிரியர் குழுவில் (Editorial Team) அவர்களை இடம்பெறச் செய்யும் வகையில், `மாணவர் எழுத்தாளர் திட்டத்தை’ அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அதேபோல, ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், கற்பித்தல் முறைகள், கற்றல் தொழில்நுட்பங்கள் என ஆசிரியர்களுக்குள்ளாக தகவல் பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் கனவு ஆசிரியர் இதழ் செயலாற்றும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.