சேலம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பசும் பால் லிட்டருக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.41 என்று விலை நிர்ணயித்து வழங்கப்படுகிறது. இரண்டு பாலுக்கும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். பசும் பாலுக்கு ரூ.42 எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். பால் கொள்முதல் பணியில் ஈடுபடும் சங்க பணியாளர்களின் எதிர்பாராத மருத்துவ செலவினங்களுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரையான காப்பீடு வசதியை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடர்பாக வரும் 26ம் தேதிக்குள் நலச்சங்க பிரதிநிதிகளை பால்வளத்துறை அமைச்சர் அழைத்து பேச வேண்டும். இல்லாவிட்டால் 28ம்தேதி முதல் தமிழக அளவில் தொடர்ந்து பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.