ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த உலககோப்பை தொடரானது இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ம் தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றனர். பெர்த்-ல் உள்ள ஒரு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தொடர்நது தீவிர பயிற்சயில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.