உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏக்கள் வழங்கிய தொகுதி கோரிக்கைகளை ஆய்வு செய்ய, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் 10 கோரிக்கைகள் குறித்த பட்டியலை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதனடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்ட அரங்கில் அந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைப்பெற்ற அந்த கூட்டத்தில் கடலூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ அய்யப்பன், புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அருள்மொழித் தேவன், சிதம்பரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோயில் தொகுதியின் வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், நெய்வேலி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், விருத்தாசலம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் தொகுதி வாரியாக இருக்கும் கோரிக்கைகள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடலூர் தொகுதி குறித்த விவாதம் தொடங்கியபோது, ”கடலூர் மாவட்ட கமிஷர் கமிஷன் வாங்கும் வேலையைத்தான் பார்க்கிறார்” என்று எம்.எல்.ஏ அய்யப்பன் பேசியதும், மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். எம்.எல்.ஏவின் அந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், அதுகுறித்து எதுவும் பேசாமல் கோரிக்கைகள் குறித்து பேசி சமாளித்தார்.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியில், கடலூர் தி.மு.க நகரச் செயலாளரும், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ராஜாவின் மனைவி சுந்தரிதான் மேயராக இருக்கிறார். அதனால் எம்.எல்.ஏ அய்யப்பன் வைத்த இந்தக் குற்றச்சாட்டு அம்மாவட்ட தி.மு.கவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.