இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் பாலூட்டும் அறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: இளம் தாய்மார்கள், பேருந்து நிலையம் உள்பட பொதுஇடங்களில்  பயன்படுத்தி பாலூட்டும் அறைகள் மூடப்பட்டு கவனிப்பாரின்றி கிடக்கும் நிலையில், அதை  மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதான் அதிமுக ஆட்சியின்போது, 2015ம் ஆண்டு குழந்தை பிறந்த இளம் தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கு, பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், முக்கிய இடங்களில், பொதுமக்கள் கூடும் இடங்களில், இளம்பெண்கள் எந்தவித  சங்கோஜமின்றி பாலூட்டும் வகையில், தனி அறையை அமைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள  மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்கள், மருத்துவமனை உள்பட மக்கள் கூடும் பொது இடங்கள், பிரபலமான கோவில்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இது கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், ஆட்சி மாறியதும், அதிகாரிகள் இந்த பாலூட்டும் அறையை கண்டுகொள்ளவில்லை. இதனால், அந்த அறை பாழடைந்து போனதுடன், அதனுள் இருந்த மின்விசிறி உள்பட பொருட்களும் திருட்டு போயின.

இதை கண்ட பொதுமக்கள், மீண்டும்  பாலூட்டும் தாய்மார்கள் அறையை திறந்து, பராமரிப்பு செய்து  பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்  வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கழக நிறுவனர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் காலம் தொட்டே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். பெண்கள் போற்றும் தலைவியாக அம்மா அவர்கள் திகழ்ந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உருவான சீர்மிகு திட்டங்கள்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், பெண்களின் சுமைகளை குறைப்பதற்குக் கொண்டுவரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் போது, கைக்குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு ஏதுவாக மறைவிட வசதியினை பேருந்து நிலையங்களில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தாய்மை உணர்வு டன், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் தான் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம். 2015-ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கென்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்த விடியா ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும், இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், தூர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது. மேலும், அப்பகுதிகள் அசுத்தமாகவும் காணப்படுகிறது.

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். நல்ல கருத்துக்களை யார் சொன்னா லும் விரும்பியவர், விரும்பாதவர் என எண்ணாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வழியை கடைபிடிப்போம் என்று சொல்பவர்கள், நாங்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும், மக்கள் நலன் பார்த்து பார்த்து திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினோம். தமிழக மக்களும் அத்திட்டங்களால் பயனடைந்தனர். அந்தத் திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிப் போட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்ட திட்டங்களை முடக்கும் போது, அவர்களுடைய வேதனையின் வெளிப்பாட்டை உங்களுக்கு, தேர்தல் மூலம் விரைவில் திருப்பித் தருவார்கள். இது வெகு தொலைவில் இல்லை.

தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.