Big Breaking: "வாரிசு vs துணிவு – பொங்கல் ரிலீஸ் உறுதியா?"- திருப்பூர் சுப்பிரமணியம் பதில்

பொங்கல் ரேஸில் விஜய்யின் `வாரிசு’ படமும் அஜித்தின் `துணிவு’ படமும் ஒன்றாக ரிலீஸாகின்றன என்ற தகவல்தான் தற்போதைய இணைய விவாதம். இதில் உண்மை இருக்கிறதா, நிஜமாகவே இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களையும் தற்போதைய சூழலில் ஒன்றாக இறக்கினால் அதற்கான திரையரங்குகள் கிடைக்குமா, இரண்டு தயாரிப்புத் தரப்புகளும், பட வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள்… அதற்கான விடைகள் இங்கே…

வாரிசு விஜய்

‘வாரிசு’ ஷூட்டிங் அப்டேட் என்ன?

விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படம் தொடங்கி சில நாள்களிலேயே பொங்கல் வெளியீடு என அறிவித்துவிட்டனர். சென்னை, ஹைதராபாத் என மாறிமாறி நடந்து வந்த படப்பிடிப்பு, இரண்டு வார ஷெட்யூலோடு தற்போது நிறைவடைகிறது. அதாவது, விஜய்யின் வசன போர்ஷன்களை எடுத்து முடித்துவிட்டனர். விஜய் – ராஷ்மிகாவின் பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அதற்காக கோகுலம் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்கம் ஒன்றை அமைத்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். பல்கேரியாவிலும் ஒரு பாடலை படமாக்கியுள்ளனர். இந்த வேலைகள் முடிந்தால் ‘வாரிசு’ தயார்.

துணிவு அஜித்

‘துணிவு’ ஷூட்டிங் அப்டேட் என்ன?

அதேபோல, அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது. மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த ஷெட்யூலோடு பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கும் என்றும் தகவல். ஆரம்பத்தில் ‘துணிவு’ படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்திட வேண்டும் என்றுதான் நினைத்தனர். ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனதில், ரிலீஸ் பொங்கலை நோக்கி நகர்ந்தது. இந்தச் சூழலில் இப்போது பொங்கல் ரிலீஸ் உறுதியாகியிருக்கிறது எனத் தகவல்.

விஜய் – அஜித் பொங்கல் ரேஸ்

இதற்கு முன் விஜய் – அஜித் படங்கள் பொங்கல் ரேஸில் சில முறை மோதியிருக்கின்றன. விஜய்யின் `ப்ரெண்ட்ஸ்’ – அஜித்தின் `தீனா’ 2001 பொங்கலுக்கு வெளியானது. அதேபோல `திருமலை’ – `ஆஞ்சநேயா’ (2003), `போக்கிரி’ – `ஆழ்வார்’ (2007), `ஜில்லா’ – `வீரம்’ (2014) ஆகியவை பொங்கலன்று ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. இந்த மோதல்களின் ரிசல்ட் அனைவரும் அறிந்ததே!

ஆனால், தற்போது கொரோனா, ஓ.டி.டி போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவில் பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. இத்தகைய சூழலில் இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களை ஒரே பண்டிகையன்று ரிலீஸ் செய்வது சாத்தியமா, இது தமிழ் சினிமா வணிகத்துக்கு ஆரோக்கியமான ஒன்றாக இருக்குமா, முக்கியமாக சம அளவில் திரையரங்குகள் கிடைக்குமா… இதற்கெல்லாம் விடைகளை அறியத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசினோம்.

திருப்பூர் சுப்பிரமணியம்

”விஜய் – அஜித் படங்களான ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ பொங்கலுக்கு வெளிவருகிறது என்பது உறுதியான தகவல்தான். அஜித்தின் படம் ஜனவரி 12 (வியாழன்) அன்றும், விஜய்யின் படம் ஜனவரி 13 (வெள்ளி) அன்றும் வெளியாகின்றன. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்கும்” என்கிறார் அவர்.

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டுக்கு ஏற்ப அவரின் படம் ஒருநாள் முன்னதாக வெளியாகிறது. இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாள் வெளியாவது யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது இரண்டு படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்ததே!

எது எப்படியோ, ரசிகர்களுக்கு இந்த பொங்கலில் செம ட்ரீட் காத்திருக்கு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.