பழநி: பழநியில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த சத்தியன் என்பவர் தனது முன்னோர் பாதுகாத்து வைத்திருந்த செப்பேடு ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் வழங்கினார். இந்த செப்பேட்டை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி மற்றும் தொல்லியல் ஆர்வலர் ஞானசேகரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த செப்பேடு சாலி மூலமார்க்கண்டேய கோத்திரத்தைச் சேர்ந்த பண்டாரங்களால், விஜயநகர அரசர் 2ம் வெங்கட்டநாயக்கரின் 11ம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. கலியுக சாகப்த ஆண்டை தவறாக குறிப்பிட்டுள்ள இந்த செப்பேடு ஏவிளம்பி தமிழ் ஆண்டு தை மாதம் 13ம் தேதி பூச நட்சத்திரம் அன்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1597ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஆகும். செப்பேட்டின் முகப்பில் முருகன் அருள்தரும் வலக்கையோடும், இடக்கை கட்டியவலம்பித முத்திரையோடும், வலதுபுறம் வேலோடும் பெறிக்கப்பட்டுள்ளார்.
முருகனின் வலதுபுறம் சேவலும், இடதுபுறம் பாம்பை மிதித்த மயிலும் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேட்டின் முன்புறம் 50 வரிகளும், பின்புறம் 41 வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 28க்கு17 செ.மீ அளவில் இச்செப்பேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் முதல் பகுதியில் முருகனின் சிறப்பு 3 வரியில் பாடல்களாக பொறிக்கப்பட்டுள்ளன. 2ம் பகுதியில் விஜயநகர பேரரசர்களின் புகழ்கள் பட்டியிலடப்பட்டுள்ளன. 3ம் பகுதியில் சாலிமூல மார்க்கண்டடேய கோத்திர பண்டாரங்களின் சிறப்புகள் விரிவாக புகழப்பட்டு செப்பேடு எழுதப்பட்ட நோக்கத்தை தெரிவிக்கின்றன.
இதில் காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 56 தேசத்திலும் வாழும் பண்டாரங்கள், பழநியில் வாழ்ந்த செல்லமுத்து பண்டாரத்திற்கு இச்செப்பேட்டை அறக்கட்டளையாக எழுதிக் கொடுத்துள்ளனர். சண்முகநதி, திருமஞ்சனம், திருமாலை, வில்வ அர்ச்சனை கட்டளைக்கு 1 பணமும், கல்யாணத்திற்கு 2 பணமும், காதுகுத்திற்கு 1 பணமும் கொடுத்து, பாக்கு, வெற்றிலை, படிஅரிசி ஆகியவற்றை 56 தேச பண்டாரங்களும் கொடுக்க வேண்டுமென தீர்மானித்து செப்பேட்டினை எழுதிக் கொடுத்துள்ளனர்.
செப்பேட்டின் இறுதி பகுதியில் இந்த அறத்திற்கு கேடு விளைவிப்பவன் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்தில் படுவான் என்ற சாபமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.