எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சிறுமியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளி செல்ல பாதை அமைப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அருகே பள்ளிக்கு செல்ல பாதை அமைக்க உதவி கேட்ட சிறுமிக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி வண்டிக்காரன் காட்டுவளவு பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, தனியார் பட்டா நிலத்தில் ஒத்தையடி பாதையில் மட்டுமே சென்று வர முடியும். உழவு செய்து விட்டால், அப்பாதையில் நடந்து செல்ல முடியாது. இதனால் பள்ளி செல்லும் சிறுமியர் கடும் பாதிப்புக்கு ஆளாயினர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் சுவாதி என்ற 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி, பள்ளி செல்ல பாதை கேட்டு அழுதவாறு சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரின் கவனத்திற்கு இந்த பதிவு சென்றது. உடனடியாக  டி.எம்.செல்வகணபதியை தொடர்பு கொண்டு, தனது சார்பில் பாதை அமைத்து தர உறுதிமொழி வழங்கும்படி கூறினார். வாட்ஸ் அப்பில் பதிவிட்ட சிறுமி சுவாதியிடமும், மு.க.ஸ்டாலின் நேரடியாக தொலைபேசியில் பேசி,  பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

முதல்வரானதும், சிறுமியின் கோரிக்கையை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், சேலம் கலெக்டர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு, பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், பாதை அமைய உள்ள நில உரிமையாளர்களிடம் பேசியதில் அவர்களும் பாதை அமைக்க ஒப்புதல் அளித்தனர். பி.என்.பட்டி பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் 800 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. நேற்று இப்பணிகளை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி துவக்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, சிறுமிக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்து நிறைவேற்றிய முதல்வருக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.